நகைச்சுவை நடிகர் மயில்சாமி மறைவு: ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் இரங்கல்
|நகைச்சுவை நடிகர் மயில்சாமி மறைவுக்கு ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சீமான் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சென்னை,
நகைச்சுவை நடிகர் மயில்சாமி மாரடைப்பால் இன்று அதிகாலை உயிரிழந்தார். மயில்சாமியின் திடீர் மறைவு திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மயில்சாமியின் மறைவுக்கு திரையுலகத்தினர், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நகைச்சுவை நடிகர் மயில்சாமி மறைவுக்கு தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "தமிழ்த் திரையுலகின் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரும், பலகுரல் கலைஞரும், எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரும், அவரது புகழை அனைத்து மேடைகளிலும் உரக்கச் சொல்லிக் கொண்டிருந்தவருமான அன்புச் சகோதரர் ஆர்.மயில்சாமி திடீரென உடல் நலக்குறைவால் உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்.
மக்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்த இவருடைய இழப்பு தமிழ்த் திரையுலகிற்கு பேரிழப்பாகும். அவருடைய குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "பிரபல நடிகர் மயில்சாமி திடீரென உயிரிழந்த செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன். பலகுரல் கலைஞராக திகழ்ந்ததோடு திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து மக்களை மகிழ்வித்தவர்.
அரசியல் ஆர்வமிக்கவராக இருந்த மயில்சாமி, ஜெயலலிதா மீது மிகுந்த மரியாதை கொண்டவர். நலிந்த திரைக்கலைஞர்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து அவர்களின் மனதில் இடம் பெற்றவர். இந்தத் துயரமான தருணத்தில் மயில்சாமியின் குடும்பத்தினருக்கும், சக திரைக்கலைஞர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துகொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
சீமான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "நகைச்சுவை நடிகர், வறியோர்க்கு உதவும் மனிதநேய மாண்பாளர், அன்புச்சகோதரர் மயில்சாமி மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த துயரமும் அடைந்தேன். தனது தனித்துவமிக்க நகைச்சுவை நடிப்பால், கோடிக்கணக்கான மக்களை மகிழ்வித்த சகோதரர் மயில்சாமியின் இழப்புபென்பது தமிழ்க்கலையுலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.
அன்புச்சகோதரர் மயில்சாமியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், திரையுலக நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்" என்ற தெரிவித்துள்ளார்.