< Back
மாநில செய்திகள்
நகைச்சுவை நடிகர் மயில்சாமி மறைவு: தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல்
மாநில செய்திகள்

நகைச்சுவை நடிகர் மயில்சாமி மறைவு: தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல்

தினத்தந்தி
|
19 Feb 2023 11:51 AM GMT

நகைச்சுவை நடிகர் மயில்சாமி மறைவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான மயில்சாமி, இன்று அதிகாலை 3.30 அளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 57 வயதாகும் மயில்சாமி சிறிய பெரிய வேடங்களில் என சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கமலின் அபூர்வ சகோதரர்கள், ரஜினியின் பணக்காரன் உள்ளிட்ட எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார்.

இவரது திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்டுள்ள மயில்சாமியின் உடலுக்கு திரையுலகினர், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நகைச்சுவை நடிகர் மயில்சாமி மறைவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,

பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் மன வேதனையும் அடைந்தேன். சின்னக்கவுண்டர், தவசி உள்ளிட்ட படங்களில் என்னுடன் நடித்துள்ளார். நகைச்சுவை மட்டுமல்லாது குணச்சித்திர வேடங்களிலும் நடித்து அசத்தியுள்ளார்.

நடிகர் மயில்சாமி சிறந்த மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட்டும் கூட. ஏராளமான மேடைகளில் தனது மிமிக்கிரிகளால் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.நடிகராக மட்டுமின்றி நெருங்கிய குடும்ப நண்பராகவும் திகழ்ந்தவர். என் மீது அதிகம் பாசம் கொண்டவர்.பழகுவதற்கு இனிமையானவர்,அனைவருக்கும் உதவும் குணம் கொண்டவர்.

இறைவன் சிவன் மீது அதிக பற்று கொண்ட மயில்சாமி சிவராத்திரி அன்று உயிரிழந்துள்ளார். அவரது இழப்பு திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாது இழப்பு. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும், திரை உலகினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.



மேலும் செய்திகள்