நகைச்சுவை நடிகர் மயில்சாமி உடல் தகனம் செய்யப்பட்டது!
|மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி உடல் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
சென்னை,
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான மயில்சாமி, நேற்று அதிகாலை 3.30 அளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 57 வயதாகும் மயில்சாமி சிறிய பெரிய வேடங்களில் என சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கமலின் அபூர்வ சகோதரர்கள், ரஜினியின் பணக்காரன் உள்ளிட்ட எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார். இவரது திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்ட மயில்சாமியின் உடலுக்கு திரையுலகினர், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அதையடுத்து நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. மயில்சாமி உடலுக்கு சிவ வாத்தியங்கள் முழங்க கலைஞர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். மயில்சாமியின் இறுதி ஊர்வலத்தில் வழிநேடுக்கிலும் பொதுமக்கள் கண்ணீர் மல்க வழி அனுப்பி வைத்தனர்
சாலிகிராமம் வெங்கடேஸ்வரா நகரில் துவங்கிய இறுதி ஊர்வலம் வடபழனியில் உள்ள ஏ.வி.எம் மயானத்திற்கு சென்றடைந்த பின்னர் மயில்சாமி உடல்லுக்கு அவரது மகன் முறைப்படி இறுதி சடங்கு செய்தார். அதன் பின்னர் அவரது உடல் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில் மயில்சாமியின் உறவினர்கள், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, நடிகர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் பங்கேற்று மயில்சாமிக்கு பிரியா விடைகொடுத்தனர்.