< Back
மாநில செய்திகள்
நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் உடல் நாளை தகனம்!
மாநில செய்திகள்

நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் உடல் நாளை தகனம்!

தினத்தந்தி
|
19 Feb 2023 4:31 PM IST

நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான மயில்சாமி, இன்று அதிகாலை 3.30 அளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 57 வயதாகும் மயில்சாமி சிறிய பெரிய வேடங்களில் என சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கமலின் அபூர்வ சகோதரர்கள், ரஜினியின் பணக்காரன் உள்ளிட்ட எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார்.

இவரது திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்டுள்ள மயில்சாமியின் உடலுக்கு திரையுலகினர், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் உடல், நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை வடபழனி ஏ.வி.எம் சுடுகாட்டில் இறுதிச்சடங்கிற்கு பின்பு தகனம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டவர் மயில்சாமி. நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் சிறந்த குணச்சித்திர வேடங்களிலும் மயில்சாமி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்