கள்ளக்குறிச்சி
அடுத்தடுத்து வாகனங்கள் மோதல்; 2 டிரைவர்கள் பலி
|உளுந்தூர்பேட்டையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதிய விபத்தில் ஆம்னி பஸ் டிரைவர்கள் 2 பேர் பலியாகினர். மேலும் 10 பயணிகள் பலத்த காயமடைந்தனர்.
உளுந்தூர்பேட்டை,
சென்னையில் இருந்து 20-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் ஆம்னி பஸ் ஒன்று தேனி மாவட்டம் போடி நோக்கி புறப்பட்டது. பஸ்சை தேனி அருகே பெரியகுளம் பகுதியை சேர்ந்த சிவா (வயது 38) என்பவர் ஓட்டினார். மாற்று டிரைவராக போடி பகுதியை சேர்ந்த சுருளி முத்து (45) என்பவர் உடன் சென்றார். இந்த பஸ் நேற்று அதிகாலை 2.20 மணி அளவில் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் உள்ள தனியார் பால் பண்ணை எதிரே சென்று கொண்டிருந்தது.
அப்போது முன்னால் இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு சென்ற லாரியை அதன் டிரைவர் திடீரென பிரேக் பிடித்து நிறுத்தியதாக தெரிகிறது. இதில் கண் இமைக்கும் நேரத்தில் லாரி மீது ஆம்னி பஸ் மோதியது. அந்த சமயத்தில் பின்னால் வந்த கார் பஸ்சின் பின்பக்கம் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் லாரியில் இருந்து இரும்பு கம்பிகள் பஸ்சின் முன்பக்க கண்ணாடியை உடைத்து கொண்டு சிவா, சுருளி முத்து ஆகிய இருவரின் மீது குத்தியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர்கள் 2 பேரும் துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர். மேலும் ஆம்னி பஸ்சில் வந்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை
இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதனிடையே விபத்து குறித்த தகவலின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் சக்கரவர்த்தி தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி சிவா, சுருளி முத்து ஆகியோரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அடுத்தடுத்து வானங்கள் மோதிய விபத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.