கன்னியாகுமரி
கருங்கல் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி
|கருங்கல் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.
கருங்கல்:
கருங்கல் அருகே உள்ள திக்கணங்கோடு ஒருமாவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஜாண்சன் ராபி. இவருடைய மகன் ஜெபின் (வயது26). இவர் வெளிநாட்டில் கொத்தனாராக வேலை செய்து வந்தார். ஜெபின் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார்.
சம்பவத்தன்று இவர் தனது உறவினரின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு குளச்சல்-முளகுமூடு சாலையில் சென்று கொண்டிருந்தார். கருக்கன்குழி பெட்ரோல் நிலையம் அருகில் சென்றபோது, முன்னால் சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிளை முந்திச்செல்ல முயன்றார். இதில் எதிர்பாராத விதமாக இரு மோட்டார் சைக்கிள்களும் மோதிக்கொண்டன. அப்போது தூக்கி வீசப்பட்ட ஜெபின் எதிரே வந்த காரின் அடியில் சிக்கி படுகாயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே ஜெபின் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த அருண்குமார், அனுஷா (23), பிரியா (24), துர்கேஷ் (2) ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்த கார் டிரைவர் மணி (63) கொடுத்த புகாரின் பேரில் கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.