< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள்கள் மோதல்; நகராட்சி ஊழியர் பலி
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்; நகராட்சி ஊழியர் பலி

தினத்தந்தி
|
17 Oct 2023 11:40 PM IST

விராலிமலை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் மணப்பாறை நகராட்சி ஊழியர் பலியானார். வாலிபர் படுகாயமடைந்தார்.

மோட்டார் சைக்கிள்கள் மோதல்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே பாத்திமா மலை ஊரை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவரது மகன் மணிகண்டன் (வயது 31). இவர் மணப்பாறை நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் மணிகண்டன் இன்று காலை அலுவலக பணி வேலையாக ஒரு ஸ்கூட்டரில் தஞ்சாவூருக்கு சென்றிருந்தார்.

பின்னர் அதே ஸ்கூட்டரில் இன்று மாலை மணப்பாறைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது விராலிமலை-கீரனூர் சாலையில் ஆம்பூர்பட்டி நால்ரோடு அருகே சென்றபோது எதிரே மணப்பாறை பொத்தமேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் பாசர்சலால் (27) என்பவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

நகராட்சி ஊழியர் பலி

இதில் தலையில் படுகாயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த பாசர்சலாலை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் விராலிமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்