தேனி
மோட்டார் சைக்கிள்கள் மோதல்; விவசாயி பலி
|தேவதானப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் விவசாயி பலியாகினார்.
தேவதானப்பட்டி அருகே உள்ள பெருமாள்கோவில்பட்டியை சேர்ந்தவர் சந்திரன் (வயது 55). விவசாயி. திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு திருநகரில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் பெருமாள் கோவில்பட்டியில் தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வத்தலக்குண்டுவுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார். பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்த சந்துரு (40) என்பவர் உடன் வந்தார். பெரியகுளம்-வத்தலக்குண்டு மெயின் ரோட்டில் பெருமாள் கோவில்பட்டி பிரிவு அருகே அவர்கள் சாலையை கடக்க முயன்றனர். அப்போது வத்தலக்குண்டுவிலிருந்து பெரியகுளம் நோக்கி சென்ற பெரியகுளத்தை சேர்ந்த டேவிட் என்பவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள், சந்திரனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சந்திரன், சந்துரு ஆகியோரை சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சந்திரன் பரிதாபமாக இறந்தார். சந்துருவை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.