கல்லூரிகளில் மாணவிகள் சுதந்திரமான முறையில் கல்வி பயில ஏதுவான சூழல் நிலவுவதை உறுதி செய்ய வேண்டும் - டிடிவி தினகரன்
|கல்லூரிகளில் மாணவிகள் சுதந்திரமான முறையில் கல்வி பயில ஏதுவான சூழல் நிலவுவதை உறுதி செய்ய வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னை,
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:-
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவக் கல்லூரியில் முதுகலை 2 ஆம் ஆண்டு படித்துவந்த மாணவி, கல்லூரி வளாக விடுதியிலேயே மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் ஒருவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக உயிரிழந்த மாணவி கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடைத்திருப்பதாக காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும், தனது மகள் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என உயிரிழந்த மாணவியின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
எனவே, மருத்துவ மாணவி உயிரிழப்பு வழக்கில் காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, கல்லூரிகளில் மாணவிகள் சுதந்திரமான முறையில் கல்வி பயில ஏதுவான சூழல் நிலவுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.