சேலம்
கல்லூரி ஆசிரியருக்கு கத்திக்குத்து
|மேட்டூரில் கல்லூரி ஆசிரியருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக அவருடைய தம்பியை போலீசார் கைது செய்தனர்.
மேட்டூர்:-
மேட்டூர் தொட்டில் பட்டி பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 40). இவருடைய அண்ணன் மகன்கள் காளியப்பன் (29), மாதேஷ் (28). இவர்கள் இருவரும் சேலம் கேம்ப் சாஸ்திரி நகரில் ஒரே வீட்டில் வெவ்வேறு அறைகளில் வசித்து வருகின்றனர். காளியப்பன் சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மாதேஷ் கட்டிட தொழிலாளியாக உள்ளார். இவர் தனது அண்ணன் காளியப்பனிடம் அடிக்கடி ஏதாவது ஒரு வகையில் தகராறு செய்து கொண்டே இருந்தாராம். நேற்று காளியப்பனிடம், தாயாரின் தோட்டினை கொடுக்குமாறு வற்புறுத்தி மாதேஷ் தகராறு செய்தார். இதை காளியப்பன் தட்டி கேட்டதால் ஆத்திரம் அடைந்த அவருடைய தம்பி, வீட்டில் இருந்த சூரி கத்தியால் அண்ணனின் கையில் குத்தினார். மேலும் காளியப்பனின் தொடையிலும் கத்தியால் குத்தினார். இதில் அவர் வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தவுடன் மாதேஷ் தப்பி ஓடினார். உடனே அக்கம் பக்கத்தினர் காளியப்பனை மீட்டு மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து காளியப்பனின் சித்தப்பா பெருமாள் கருமலைக்கூடல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாதேஷை கைது செய்தனர்.