திருவள்ளூர்
திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலில் அபாய சங்கிலியை இழுத்த கல்லூரி மாணவர்கள் - 5 பேருக்கு அபராதம்
|திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலில் ஏறிய கல்லூரி மாணவர்கள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததால் பரபரப்பு நிலவியது. இதில் 5 பேருக்கு திருவள்ளூர் கோர்ட்டு அபராதம் விதித்தது.
சென்னையில் உள்ள கல்லூரிக்கு வருவதற்காக சோளிங்கர், அரக்கோணம், திருவள்ளூர் உள்ளிட்ட அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேற்று காலை திருவள்ளூரில் இருந்து சென்னை செல்லக்கூடிய விரைவு புறநகர் மின்சார ரெயிலில் ஏறினர்.
நேற்று கல்லூரி முதல் நாள் என்பதால் மாணவர்கள் ரகளையில் ஈடுபடக்கூடும் என்று அறிந்து முன்னதாக திருவள்ளூர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் செபாஸ்டின் தலைமையிலான போலீசார் மற்றும் திருவள்ளூர் ரெயில்வே போலீசார் இணைந்து திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது 5-வது நடைமேடையில் இருந்து காலை ரெயில் புறப்பட்டபோது திடீரென மாணவர்களில் சிலர் ரெயிலில் இருந்த அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்தனர். இதனால் புறப்பட்ட உடனேயே ரெயில் நின்றுவிட்டது. இதையடுத்து போலீசார் ரெயிலில் ஏறி கல்லூரி மாணவர்களை எச்சரித்தனர்.
மீண்டும் ரெயில் புறப்பட்டபோது மீண்டும் மாணவர்கள் அபாய சங்கிலி பிடித்து இழுத்தனர். இதுபோல் 4 முறை அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததால் ரெயிலில் பயணம் செய்த பொதுமக்கள் அவதியடைந்தனர். இதனால் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இருந்து 8.20 மணிக்கு புறப்பட வேண்டிய ரெயில் காலை 8.41 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டது.
அதைத்தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ரெயில் பெட்டிகளில் ஏறி விசாரணை செய்ததில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களான சக்தி (19), சிவராமகிருஷ்ணன் (22), கார்த்திக் (19), 18 வயது மாணவர் மற்றும் இவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக திருவள்ளூர் பகுதியை சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவரான அப்துல் அஷ்வாக் (21) ஆகிய 5 பேரை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் பிடித்து கைது செய்து 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
அவர்களுக்கு கோர்ட்டில் அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்ததையடுத்து 5 பேரும் அபராத தொகையை கட்டி சென்றனர்.