< Back
மாநில செய்திகள்
விழுப்புரம் பஸ் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் முற்றுகை
விழுப்புரம்
மாநில செய்திகள்

விழுப்புரம் பஸ் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் முற்றுகை

தினத்தந்தி
|
20 April 2023 12:15 AM IST

கிராமப்புற பஸ்கள் இயங்காததால் விழுப்புரம் பஸ் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்

விழுப்புரம்

மாணவர்கள் போராட்டம்

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அதேபோல் விழுப்புரம் டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கல்லூரியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள், அரசு டவுன் பஸ்களில் தங்கள் கிராமத்தில் இருந்து கல்லூரிகளுக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று அமாவாசை என்பதால் கிராமப்புறங்களுக்கு செல்லும் முக்கிய பஸ்கள், சிறப்பு பஸ்களாக மேல்மலையனூருக்கு இயக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மாலை 4 மணி முதல் 6 மணி வரை போதிய பஸ்கள் இல்லாமல் உடனடியாக வீட்டுக்கு செல்ல முடியாமல் மாணவ, மாணவிகள் தவித்தனர். வெகுநேரம் பஸ்சிற்காக காத்திருந்த அவர்கள், இரவு 7 மணியளவில் திடீரென பஸ் நிலையத்தின் நுழைவுவாயில் அருகில் வெளியே செல்லும் பஸ்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

அப்போது தங்கள் கிராமத்திற்கு செல்லும் பஸ்களை உடனே இயக்க வேண்டும் என மாணவ- மாணவிகள் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் போலீசாரும், அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகளும் விரைந்து வந்து மாணவ- மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடனடியாக பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதன்பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

மேலும் செய்திகள்