திருவண்ணாமலை
பஸ்சில் இடம் பிடிக்க ஒருவரையொருவர் தாக்கி கொண்ட கல்லூரி மாணவர்கள்
|செய்யாறில் அரசு பஸ்சில் இடம் பிடிக்க போட்டி ஏற்பட்டு, கல்லூரி மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
செய்யாறு
செய்யாறில் அரசு பஸ்சில் இடம் பிடிக்க போட்டி ஏற்பட்டு, கல்லூரி மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கலை கல்லூரி
செய்யாறில் உள்ள அரசு அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் காலை, மாலை என சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறுகின்றன. இங்கு திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
ஆரணி பகுதியில் இருந்து ஏராளமான மாணவர்கள் காலை வகுப்பிற்கு கல்லூரிக்கு வருகின்றனர்.
மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றார்போல கல்லூரி நேரத்தில் அரசு பஸ்கள் போதிய அளவுக்கு இல்லாததால் கல்லூரிக்கு வரும்போதும், கல்லூரி விட்டு வீடு திரும்பும்போதும் மாணவர்கள் பஸ்களில் ஓடிச்சென்று முட்டி மோதிக் கொண்டு இடம் பிடித்து கொண்டும், படியில் தொங்கியபடியும் பயணம் செய்து வருகின்றனர்.
இடம் பிடிப்பதில் போட்டி
இந்த நிலையில் இன்று கல்லூரிக்கு காலை சுழற்சியில் வகுப்பு முடித்து மாணவர்கள் கல்லூரியில் இருந்து வெளியில் வந்தனர்.
மதியம் 1.30 மணி அளவில் புறவழிச் சாலை பஸ் நிறுத்தத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும் ஆரணி பகுதியைச் சேர்ந்த மாணவர்களுக்கு இடையே பஸ்சில் இடம் பிடிப்பத்தில் போட்டி ஏற்பட்டு மோதலாக உருவானது.
அவர்கள் இரு குழுக்களாக பிரிந்து ஒருவருக்கொருவர் பிடித்து கீழே தள்ளி பலமாக தாக்கிக் கொண்டனர். அதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.
இதுகுறித்து தகவல் அறிந்த செய்யாறு போலீசார் விரைந்து வந்து ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட மாணவர்களை கலைத்தனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கூடுதல் பஸ்கள்
மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அந்தந்த வழித்தடங்களில் கல்லூரி மற்றும் பள்ளி வேளைகளில் அரசு கூடுதலாக பஸ்களை இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.