சென்னை
வண்ணாரப்பேட்டையில் பஸ்சின் மேற்கூரையில் ஏறி ரகளை செய்த கல்லூரி மாணவர்கள்
|வண்ணாரப்பேட்டையில் கல்லூரி மாணவர்கள் பஸ்சின் மேற்கூரையில் ஏறி ரகளை செய்தனர்.
பெரம்பூர்,
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் எண்ணூரில் இருந்து வள்ளலார் நகர் வரை செல்லும் மாநகர பஸ்(தடம் எண் 56 ஏ) நேற்று முன்தினம் மாலை வந்து கொண்டிருந்தது. அப்போது வண்ணாரப்பேட்டை தியாகராயா கல்லூரி மாணவர்கள் 10-க்கும் மேற்பட்டவர்கள் பஸ்சை நிறுத்தி, மேற்கூரையில் ஏறினார்கள்.
பின்னர் அவர்கள், "தியாகராயா கல்லூரிக்கு ஜே, தியாகராயா புள்ளிங்கோவுக்கு ஜே" என முழக்கமிட்டு ரகளையில் ஈடுபட்டனர். மேலும் டிரைவர், கண்டக்டர், பயணிகள் வலியுறுத்தியும் மேற்கூரையில் இருந்து கீழே இறங்க மறுத்து ஆபத்தான முறையில் பஸ் மேற்கூரையில் நின்றபடி பயணம் செய்தனர். இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் மிகுந்த அச்சத்துடன் பயணம் செய்தனர்.
சிறிது தூரம் சென்ற பிறகு பஸ்சை நிறுத்திய டிரைவர், இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதனால் பயந்துபோன கல்லூரி மாணவர்கள் பஸ்சில் இருந்து கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டனர். மாநகர பஸ்சின் மேற்கூரையில் நின்றபடி கல்லூரி மாணவர்கள் ரகளை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுபற்றி வண்ணாரப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.