சென்னை
திருவொற்றியூர் விம்கோநகர் ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் மோதல்; கல் வீச்சில் 3 பேர் காயம்
|திருவொற்றியூர் விம்கோநகர் ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் மோதல்; கல் வீச்சில் 3 பேர் காயம்திருவொற்றியூர் விம்கோ நகர் ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. கல்வீசி தாக்கியதில் மின்சார ரெயில் பெட்டியின் ஜன்னல் கண்ணாடி நொறுங்கியது. குழந்தை உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து சூலூர்பேட்டைக்கு நேற்று மாலை புறநகர் மின்சார ரெயில் புறப்பட்டு சென்றது. அதில் சென்னையில் உள்ள மாநில கல்லூரி மற்றும் பச்சையப்பன் கல்லூரிகளில் படிக்கும் பொன்னேரி, அனுப்பப்பட்டு, மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவர்கள், கல்லூரி முடிந்து தங்கள் ஊர்களுக்கு செல்ல பயணம் செய்தனர்.
மின்சார ரெயில் திருவொற்றியூர் விம்கோ நகர் ரெயில் நிலையம் வந்ததும், ரெயிலில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. அவர்கள் தாங்கள், மறைத்து வைத்து இருந்த பட்டாக்கத்தி, காலி மது பாட்டில்கள் மற்றும் கற்களை கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
ரெயில் பெட்டிக்கு உள்ளேயேும், ரெயில் நிலைய மேடையிலும் இறங்கி இந்த கல்வீச்சில் ஈடுபட்டனர். இதனால் மின்சார ரெயிலில் இருந்த பயணிகள் அலறினர்.
இந்த கல்வீச்சின் போது மின்சார ரெயிலின் 3-வது பெட்டியில் உள்ள 4 ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. அதில் இருந்த பயணிகள் மீதும் கற்கள் பட்டது. இதில் குழந்தை உள்பட 3 பேருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்து மின்சார ரெயில் புறப்பட்டதால் மோதலில் ஈடுபட்ட மாணவர்கள், மீண்டும் ரெயிலில் ஏறி பயணம் செய்தனர்.
இதுபற்றி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தயாராக எண்ணூர் கத்திவாக்கம் ரெயில் நிலையத்தில் காத்திருந்தனர். இதையறிந்த மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள், கத்திவாக்கம் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் வந்து நின்றதும், கீழே இறங்கி தப்பி ஓடி விட்டனர்.
இதையடுத்து கண்ணாடி உடைந்த பெட்டியில் இருந்த பயணிகளை வேறு பெட்டிக்கு ரெயில்வே போலீசார் மாற்றிவிட்டனர். இதனால் அந்த மின்சார ரெயில் சுமார் 20 நிமிடம் தாமதமாக அங்கிருந்து புறப்பட்டது.
மாணவர்கள் மோதல் தொடர்பாக ரெயில்வே போலீசார் சம்பவம் நடந்த ரெயில் நிலையத்தில் நேரில் சென்று அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும், ரெயில் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது ரெயில்வே போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்தனர்.
ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தால் ரெயில் பயணிகளிடையே பெரும் பதற்றம் ஏற்பட்டது.