கரூர்
மணக்கோலத்துடன் தேர்வில் பங்கேற்ற கல்லூரி மாணவி...!
|குளித்தலை அருகே திருமணத்தன்று நடைபெற்ற தேர்வில் மணக்கோலத்துடன் மாணவி பங்கேற்ற உள்ளார்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலையில் உள்ள குளித்தலை அரசு கலைக் கல்லூரியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பில் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதில் இறுதியாண்டு முதுகலை வணிகவியல் திட்ட கட்டுரை வாய்மொழித் தேர்வு இன்று நடத்தப்பட்டது.
இதற்கென தனி தேர்வாளர் நியமிக்கப்பட்டு இருந்தார். அவர் முதுகலை வணிகவியல் துறை மாணவ, மாணவிகளுடன் வாய்மொழித் தேர்வு நடத்தினார். இந்த நிலையில் இக்கல்லூரியில் முதுகலை வணிகவியல் இறுதியாண்டு படிக்கும் தமிழ்ச்செல்வி என்ற மாணவிக்கு இன்று திருமணம் நடைபெற்றது.
அவர் இக்கல்லூரியில் நடைபெறும் வாய்மொழித் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் என்ற காரணத்தால் திருமணம் முடிந்த உடன் மணமகனான முத்துசாமியை அழைத்துக்கொண்டு இக்கல்லூரிக்கு வந்தார். பின்னர் மணக்கோலத்திலேயே தமிழ்செல்வி வாய்மொழி தேர்வில் பங்கேற்று தேர்வாளரின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
மணக்கோலத்தில் கல்லூரி மாணவி வாய்மொழித் தேர்வில் பங்கேற்ற நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.