சேலம்
கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி
|ஓமலூர் அருகே காதலிக்குமாறு வாலிபர் கட்டாயப்படுத்தியதால் கல்லூரி மாணவி விஷம்குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஓமலூர்:-
ஓமலூர் அருகே காதலிக்குமாறு வாலிபர் கட்டாயப்படுத்தியதால் கல்லூரி மாணவி விஷம்குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கல்லூரி மாணவி
சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்த கருப்பணம்பட்டி திட்டு பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் சங்ககிரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி., முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கல்லூரிக்கு சென்று வருவதற்கு வசதியாக கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு ஓமலூர் காமராஜர் நகர் பகுதியில் வாடகைக்கு வீடு மாறி வந்தனர். .
இந்த நிலையில் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த குப்புசாமி என்பவரின் மகன் சபரி(24) என்பவர் மாணவியுடன் பேசி பழகியதாக கூறப்படுகிறது. இதையறிந்த மாணவியின் தந்தை, அந்த மாணவிக்கு உரிய அறிவுரை கூறினார். மேலும் இனி வாலிபர் சபரியுடன் பேச வேண்டாம் என்று கூறியதாக தெரிகிறது.
செல்போனில் மிரட்டல்
இதனால் அந்த மாணவி சபரியுடன் பேசாமல் இருந்துள்ளார். மேலும் அந்த வாலிபர் மகளுக்கு தொந்தரவு கொடுக்க கூடாது என்பதற்காக மாணவியின் பெற்றோர் கருப்பணம்திட்டுவில் உள்ள சொந்த வீட்டுக்கு சென்று விட்டனர்.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சபரி அந்த மாணவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு நீ என்னுடன் பேசி பழகி காதலிக்க வேண்டும், இல்லை என்றால் நீ என்னுடன் பேசி தவறாக நடந்து கொண்டதை உன் பெற்றோரிடம் கூறி விடுவேன் என்றும், சமூக வலைத்தளத்தில் (நெட்டில்) வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியதாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த மாணவியின் தந்தைக்கு சபரி செல்போனில் தொடர்பு கொண்டு அடிக்கடி பேசி உள்ளார். அப்போது அவர், உன் மகளை என்னிடம் பேசி பழகி காதலிக்க சொல், இல்லை என்றால் உன்னையும், உன் மனைவியையும் தூக்கிச்சென்று கொன்று விடுவேன் என்றும், உன் மகள் என்னுடன் இருந்ததை நெட்டில் அனுப்பி விடுவேன் என்றும் செல்போனில் பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது.
தற்கொலை முயற்சி
மேலும் அந்த மாணவியின் தாயாரை பற்றியும் அவதூறாக பேசி செல்போனில் படம் அனுப்ப உள்ளதாக அந்த மாணவியிடம் செல்போனில் பேசி சபரி மிரட்டி உள்ளார். இதனால் மனம் உடைந்து காணப்பட்டஅந்த மாணவி, நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த பூச்சி மருந்தை தண்ணீரில் கலந்து குடித்து விட்டார். பின்னர் நேற்று காலையில் அந்த மாணவி வயிற்று வலியால் துடித்துள்ளார்.
அப்போது தாயார் அந்த மாணவியிடம் கேட்ட போது, தான் விஷம் குடித்து விட்டதாக கூறி உள்ளார். இதையடுத்து அந்த மாணவி சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து அந்த மாணவி கொடுத்த புகாரின் பேரில் ஓமலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
====