< Back
மாநில செய்திகள்
காஞ்சீபுரம் அருகே லாரி மோதி கல்லூரி மாணவர் சாவு
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

காஞ்சீபுரம் அருகே லாரி மோதி கல்லூரி மாணவர் சாவு

தினத்தந்தி
|
6 July 2023 4:30 PM IST

காஞ்சீபுரம் அருகே லாரி மோதி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

சென்னையை சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் தம்பிதுரை (வயது 19). இவர் சிறு வயது முதல் காஞ்சீபுரத்தை அடுத்த ஏனாத்தூர் சமத்துவபுரம் பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்தார்.

கடந்த ஆண்டு பிளஸ்-2 படித்து முடித்த நிலையில், காஞ்சீபுரத்தை அடுத்த கீழம்பியில் உள்ள ஒரு தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.எஸ்.சி. பட்டப்படிப்பில் சேர்ந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முதல் நாளாக கல்லூரிக்கு தன்னுடைய மோட்டார் சைக்கிளில் ஆர்வமுடன் சென்றார்.

கல்லூரியில் செலுத்த வேண்டிய கல்வி கட்டணத்தை செலுத்திவிட்டு பிற்பகல் மாணவர் தம்பிதுரை வீடு திரும்பினார்.

கீழம்பி சாலையில் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக எதிரே வந்த மினிலாரி தம்பிதுரையின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் நிலை தடுமாறி கீழேவிழுந்ததில் தம்பிதுரையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அருகில் இருந்த கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்து பரிசோதித்த ஆம்புலன்சு ஊழியர்கள் மாணவர் தம்பிதுரை உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும், பாலுசெட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தம்பிதுரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பாலுச்செட்டிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய மினிலாரியை பறிமுதல் செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்