காஞ்சிபுரம்
லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல் கல்லூரி மாணவர்- மாணவி பலி
|காஞ்சீபுரம் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர்- மாணவி இருவரும் பரிதாபமாக பலியாகினர்.
காஞ்சீபுரம் அருகே திருப்பருத்திக்குன்றம் பகுதியை சேர்ந்த பாபு என்பவரின் மகள் மோனிஷா (வயது 18). இவர் காஞ்சீபுரத்தை அடுத்த ஏனாத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். இதைபோல காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் ராகுல் (18). இவரும் அதே கல்லூரியில் படித்து வந்தார். இவர்கள் இருவரும் பள்ளி பருவம் முதல் நண்பர்களாக பழகி வந்தனர்.
இந்நிலையில் நேற்று மதியம் ராகுல் மோனிஷாவிடம் உன்னை நான் வீட்டில் விட்டு செல்கிறேன் என்று கூறியதாக தெரிகிறது. இதையடுத்து ராகுல் தனது நண்பரின் பைக்கில் மோனிசாவை ஏற்றி கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
குண்டுகுளம் அருகே புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற வாகனத்தை ராகுல் முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிர்பாரதவிதமாக எதிரே வந்த கனரக லாரி மீது இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்த நிலையில் லாரியின் சக்கரம் இருவரும் மீதும் ஏறி இறங்கியது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி 2 பேரும் பரிதாபமாக பலியானார்கள்.
இதுகுறித்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பாலுசெட்டிசத்திரம் போலீசார் உயிரிழந்த 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த பாலுசெட்டிசத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.