தேனி
கல்லூரி மாணவர் பலி
|தேவதானப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் கல்லூரி மாணவர் பலியானார்.
தேனி அருகே உள்ள அரண்மனைபுதூரை சேர்ந்தவர் குருபிரசாத் (வயது 20). இவா் பெரம்பலூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை குருபிரசாத், அவரது நண்பர்களான அதே ஊரை சேர்ந்த ஜஸ்வந்த் குமார் (18), பழனிசெட்டிபட்டியை சேர்ந்த வரதராஜன் (25) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் கொடைக்கானலுக்கு சென்றனர். பெரியகுளம்- வத்தலக்குண்டு சாலையில் தர்மலிங்கபுரம் அருகே எதிரே வந்த சுற்றுலா வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
அவர்களில் குருபிரசாத் சம்பவ இடத்திலேயே பலியானார். காயம் அடைந்த ஜஸ்வந்த்குமார், வரதராஜன் ஆகியோரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வேனில் பயணம் செய்த 25 பேர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து தொடர்பாக வேன் டிரைவர் அணைக்கரைபட்டியை சேர்ந்த பாண்டியராஜன் (42) என்பவர் மீது தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.