< Back
மாநில செய்திகள்
டிராக்டர் மீது பஸ் மோதி கல்லூரி மாணவர் பலி
நாமக்கல்
மாநில செய்திகள்

டிராக்டர் மீது பஸ் மோதி கல்லூரி மாணவர் பலி

தினத்தந்தி
|
21 Oct 2023 12:15 AM IST

ராசிபுரம் அருகே டிராக்டர் மீது பஸ் மோதியதில் படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

ராசிபுரம்

படிக்கட்டில் பயணம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள வையப்பமலை பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ் (வயது 20). இவர் ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகளூர்கேட் திருவள்ளுவர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

அதே பகுதியைச் சேர்ந்தவர் நவீன்குமார் (21). இவர் ராசிபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவரும் ராசிபுரம் செல்வதற்காக வையப்பமலை பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்துக் கொண்டிருந்தனர்.

கல்லூரி மாணவர் பலி

அப்போது ஈரோட்டில் இருந்து ராசிபுரத்தை நோக்கி சென்ற தனியார் பஸ்சில் இருவரும் ஏறினர். பஸ்சுக்குள் கூட்டம் நிறைய இருந்ததால் லோகேஷ், நவீன்குமார் இருவரும் பஸ்சின் படிக்கட்டில் தொங்கியவாறு ஆபத்தான நிலையில் பயணம் செய்தனர். அந்த பஸ் ராசிபுரம் அருகே உள்ள பிள்ளா நல்லூர் அருகே சென்றபோது அங்கு சாலை ஓரமாக பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் டிராக்டரை நிறுத்திவிட்டு கடைகளில் குப்பைகளை சேகரித்துக் கொண்டிருந்தனர். அப்போது அதிவேகமாக சென்ற பஸ் டிராக்டர் மீது பக்கவாட்டில் மோதியது.

இதில் படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்த லோகேஷ் மற்றும் நவீன்குமார் இருவரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் அங்கு சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் லோகேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது பற்றி புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்