சென்னை
வியாசர்பாடியில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை - காதலன் இறந்த சோகத்தில் விபரீத முடிவு
|வியாசர்பாடியில் காதலன் இறந்த சோகத்தில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வியாசர்பாடி மல்லிப்பூ காலனி 218-வது பிளாக்கை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 45). இவர் ஆட்டோ ஒட்டி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகளுக்கும், மகனுக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். இவரது கடைசி மகள் மைத்தீஸ்வரி (வயது 18). தங்கசாலையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், தந்தை சுரேஷ் நேற்று முன்தினம் ஆட்டோ சவாரிக்கு சென்று விட்டார். மனைவி வேலைக்கு சென்று விட்டதையடுத்து, மகள் மைத்தீஸ்வரிக்கு கல்லூரிக்கு சென்று விட்டாரா? என்று தெரிந்து கொள்ள அவரை செல்போனில் அழைத்துள்ளார். அப்போது மைத்தீஸ்வரி போனை எடுக்காததால், அண்டை வீட்டாரை தொடர்பு கொண்டு தனது வீட்டிற்கு சென்று மைத்தீஸ்வரியை செல்போனில் அழைக்கும்படி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவர்கள் சென்று பார்த்தபோது, கதவு பூட்டப்பட்டு உள்தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து கதவை வெகுநேரம் தட்டியும் திறக்காததால், சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அதில், வீட்டின் அறையில் உள்ள மின்விசிறியில் மைத்தீஸ்வரி தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் சுரேசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையறிந்த சுரேஷ் வீட்டிற்கு விரைந்து வந்து மகள் தூக்கில் தொங்கி இறந்து கிடப்பதை கண்டு கதறி அழுதார். பின்னர் இது குறித்து தகவலறிந்து வந்த வியாசர்பாடி போலீசார் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கொடுங்கையூர் கண்ணதாசன் நகரில் வசித்து வந்த பிரவீன் என்ற வாலிபரும், மைத்தீஸ்வரியும் ஒருவரையொருவர் காதலித்து வந்ததாகவும், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதால் கடந்த மாதம் பிரவீன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த வைத்தீஸ்வரி உடனே தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்ற நிலையில் பெற்றோர் உயிரை காப்பாற்றியதும் தெரியவந்தது.
இருப்பினும், காதலன் தற்கொலை செய்து கொண்ட சோகத்தில் இருந்து வந்த மைத்தீஸ்வரி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.