கல்லூரி மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளை தப்ப விடக்கூடாது - ராமதாஸ்
|குற்றச்செயல்கள் அதிகரிக்கவும், சட்டம், ஒழுங்கு சீர்குலையவும் காரணமாக உள்ள கஞ்சாவை அரசு முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை,
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு கலைக்கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவர், அவருடன் பயிலும் மாணவர்களால் மயக்க மருந்து கொடுத்து, கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. கஞ்சா போதையில் இக்கொடுமையை அரங்கேற்றிய மனித மிருகங்கள் இதுவரை கைது செய்யப்படாதது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
ஜெயங்கொண்டம் அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு பயின்று வரும், அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் கடந்த மாதம் 25ம் தேதி கல்லூரி முடித்து திரும்பும் போது, அவரை வழிமறித்த அதே கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் மயக்க மருந்து கொடுத்து இரு சக்கர ஊர்தியில் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. கஞ்சா போதையில் இருந்த அவர்கள், அந்த மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகவும் தெரியவந்திருக்கிறது. ஒருகட்டத்தில் அவர்களால் இன்னொரு இடத்திற்கு கடத்திச் செல்லப்படும் போது, அம்மாணவி மிகவும் துணிச்சலாக செயல்பட்டு, அவர்களிடமிருந்து தப்பிச் சென்றிருக்கிறார். அதைத் தொடர்ந்து தமது பெற்றோருடன் செப்டம்பர் 26ம் நாள் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அதன்படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த காவல்துறையினர், அதன்பிறகு 23 நாட்களுக்கும் மேலாகியும் இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளில் ஒருவரைக் கூட இன்று வரை கைது செய்யவில்லை.
காவல்துறையினரும், வேறு சிலரும் இணைந்து இந்த வழக்கை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதற்கு வசதியாக முதல் தகவல் அறிக்கை உண்மைகளை மறைத்து, பல்வேறு குளறுபடிகளுடன் பதிவு செய்யப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பாலியல் வன்கொடுமையால் ஒரு மாணவி பாதிக்கப்பட்டால், அது தொடர்பான வழக்குகளில் அடுத்தடுத்து செய்யப்பட வேண்டிய எந்த நடவடிக்கையையும் காவல்துறை செய்யாதது ஐயங்களை வலுப்படுத்துகிறது.
ஊரகப் பகுதியில் இருந்து பல்வேறு தடைகளைக் கடந்து கல்லூரிக்கு படிக்கச் செல்லும் மாணவிகள் நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் கல்வி நிறுவனங்களுக்கு சென்று வர முடியாத சூழல் நிலவுகிறது என்றால், அந்தப் பகுதியில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை என்பது தான் பொருள் ஆகும். கல்லூரி மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யும் அளவுக்கு நகரப்பகுதிகளில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது என்றால், இது எளிதில் கடந்து போகக்கூடிய நிகழ்வு இல்லை.
அரியலூர் மாவட்டத்தில் இந்த அளவுக்கு சட்டம், ஒழுங்கு சீர்குலைவதற்கு காரணமே கட்டுப்படுத்தப் படாத கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனை தான். அரியலூர் மாவட்டத்தில் அனைத்து மூலை, முடுக்குகளிலும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், கூலித்தொழிலாளர்கள் வரை பெரும்பான்மையானோர் கஞ்சா போதையில் மிதப்பதால் தான் குற்றச்செயல்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
தமிழ்நாட்டின் சீரழிவுக்கு கஞ்சா தான் காரணமாக இருக்கப் போகிறது என்று பல ஆண்டுகளுக்கு முன்பே நான் எச்சரித்திருந்தேன். ஆனால், அதன் முக்கியத்துவம் குறித்து அறியாத காவல்துறையினர், கஞ்சா கடத்தலைத் தடுக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை. அதன் விளைவு தான் கல்லூரி மாணவியே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிகழ்வு ஆகும், இது அரசின் மிகப் பெரிய தவறாகும்.
எனவே, தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட மனித மிருகங்கள் அனைத்தையும் உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்; பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வழங்க வேண்டும். இவை அனைத்திற்கும் மேலாக குற்றச்செயல்கள் அதிகரிக்கவும், சட்டம், ஒழுங்கு சீர்குலையவும் காரணமாக உள்ள கஞ்சாவை அரசு முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.