< Back
மாநில செய்திகள்
மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் சாவு
ஈரோடு
மாநில செய்திகள்

மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் சாவு

தினத்தந்தி
|
7 Nov 2022 12:02 AM GMT

சிவகிரி அருகே மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகிரி

சிவகிரி அருகே மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

கல்லூரி மாணவர்

சிவகிரி அருகே உள்ள கந்தசாமிபாளையம் வடக்கு வீதி மதுரை வீரன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 42). இவர் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். அவருடைய மனைவி கஸ்தூரி (33). இவர்களுடைய மகன் ஹரிசங்கர் (18).

ஹரிசங்கர் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் உணவு மற்றும் கேட்டரிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அவர் அந்த பகுதியை சேர்ந்த சிலருடன் சிமெண்டு ஓடு மாட்டும் வேலைக்கு சென்றார். அங்கு சுமார் 2 அடி உயரமுள்ள இரும்பு பேரலில் நின்றுகொண்டு சிமெண்டு ஓட்டை மாட்டிக்கொண்டு இருந்தார்.

சாவு

அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மின்சாரம் தாக்கியதில் மயங்கி பேரலில் இருந்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கார் மூலம் சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு ஹரிசங்கர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி அறிந்ததும் ஹரிசங்கரின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். மேலும் இந்த சம்பவம் குறித்து சிவகிரி போலீசில் அவருடைய தந்தை ரவி புகார் கொடுத்தார்.

வழக்குப்பதிவு

அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-

தன் மகன் ஹரிசங்கர் வற்புறுத்தி வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அப்போது தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத காரணத்தினாலும் அஜாக்கிரதையாலும் தன் மகன் உயிரிழக்க காரணமாக இருந்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் அந்த புகாரில் கூறியிருந்தார். அதன்பேரில் கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் அருள்சாமி ஆகியோர் கந்தசாமிபாளையத்தை சேர்ந்த லேத் உரிமையாளர் ராஜ்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சாலை மறியல்

மேலும் லேத் உரிமையாளர் ராஜ்குமாரை உடனடியாக கைது செய்யக்கோரி ஹரிசங்கரின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் நேற்று மாலை 5.30 மணி அளவில் சிவகிரி போலீஸ் நிலையம் முன்புள்ள ரோட்டில் ஒன்று திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்ததும் சிவகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது போலீசார் கூறும்போது, 'ராஜ்குமார் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று உறுதி அளித்தனர். அதை ஏற்றுக்கொண்ட ஹரிசங்கரின் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். ஹரிசங்கரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு்ள்ளது.

மேலும் செய்திகள்