விழுப்புரம்
திண்டிவனம் அருகே விபத்து:சாலையோர பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து கல்லூரி மாணவர் பலி
|திண்டிவனம் அருகே சாலையோர பள்ளத்தில் டிராக்டர் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார்.
பிரம்மதேசம்,
கல்லூரி மாணவர்
திண்டிவனம் அடுத்த பிரம்மதேசம் அருகே உள்ள வைடப்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாராயணசாமி மகன் நரேஷ் குமார் (வயது 23). இவர் சென்னையில் தங்கி, அங்குள்ள தனியார் கல்லூரியில் எலக்ட்ரிகல் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் உடல் நல குறைவால் கடந்த 29-ந்தேதி உயிரிழந்த பெரியப்பா மகனின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நரேஷ்குமார் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
இந்த நிலையில் வீட்டில் இருந்த நரேஷ்குமார் நேற்று விவசாய பணி மேற்கொள்வதற்காக தனக்கு சொந்தமான வயலுக்கு டிராக்டரை ஓட்டிச் சென்றார். வைடப்பாக்கம்- லாலாபேட்டை சாலையில் சென்றபோது, திடீரென மாடு ஒன்று சாலையின் குறுக்கே ஓடியது. இதைபார்த்த நரேஷ்குமார் மாடு மீது மோதாமல் இருக்க டிராக்டர் பிரேக்கை திடீரென போட்டார். அந்த சமயத்தில் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் தலைகுப்பற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பலி
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த நரேஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த பிரம்மதேசம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான நரேஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.