< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர் சாவு
விழுப்புரம்
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர் சாவு

தினத்தந்தி
|
12 Nov 2022 12:15 AM IST

செஞ்சி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர் பலியானார். உடன் சென்ற அவரது நண்பர் விரக்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

செஞ்சி

மாணவர்

செஞ்சி எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா மகன் சீனிவாசன்(வயது 20). இவர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று சீனிவாசன் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் பிரபு(20) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் செஞ்சியில் இருந்து கோணை கிராமம் நோக்கி சென்று கொண்டிருந்தார். பிரபு மோட்டார் சைக்கிளை ஓட்டினார். சீனிவாசன் பின்னால் அமர்ந்திருந்தார்.

அங்கராயநல்லூர் அருகே சென்றபோது எதிர்பாரதவிதமாக இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தனர். இதில் படுகாயம் அடைந்த சீனிவாசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். லேசான காயத்துடன் மயக்க நிலையில் இருந்த பிரபுவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலைக்கு முயன்றார்

மயக்கம் தெளிந்த பின்னர் விபத்தில் சீனிவாசன் இறந்தது அவருக்கு தெரியவந்தது. தனது ஆருயிர் நண்பர் இறந்து போனதை அறிந்து விரக்தி அடைந்த பிரபு ஆஸ்பத்திரி வளாகத்தில் கிடந்த கூர்மையான இரும்பு ஆயுதத்தால் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்ய முயன்றார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஓடி சென்று பிரபுவை பிடித்து சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். முதல் உதவி சிகிச்சைக்கு பின்னர் அங்கிருந்து அவரை மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரபுவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

பரபரப்பு

இந்த விபத்து குறித்து செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் வாலிபர் இறந்ததால் உடன் சென்ற அவரது நண்பர் விரக்தி அடைந்து கழுத்தை அறுத்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்