சென்னை
ஆவடி அருகே மின்சார ரெயிலில் அடிபட்டு கல்லூரி மாணவர் பலி
|ஆவடி அருகே மின்சார ரெயிலில் அடிபட்டு கல்லூரி மாணவர் பலியானார்.
ஆவடியை அடுத்த முத்தாபுதுப்பேட்டை தெலுங்கு காலனியை சேர்ந்தவர் சின்னநாகையா. இவர், முத்தாபுதுப்பேட்டை அருகே உள்ள தனியார் கல்லூரியில் பஸ் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவரும் தந்தை வேலை செய்யும் அதே கல்லூரியில் படித்து வருகின்றனர். இவர்களில் மூத்த மகன் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படிக்கிறார். இளைய மகன் நவீன் (வயது 21) கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று காலை நவீன், முத்தாபுதுப்பேட்டை அருகே ரெயில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார். அப்போது பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து சென்னை நோக்கி வந்த மின்சார ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே நவீன் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆவடி ரெயில்வே போலீசார் பலியான நவீன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.