கன்னியாகுமரி
டெம்போ மோதியதில் கல்லூரி மாணவர் சாவு
|மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த கல்லூரி மாணவர் மீது டெம்போ மோதியது. இந்த விபத்தில் மாணவர் பரிதாபமாக இறந்தார்.
களியக்காவிளை:
மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த கல்லூரி மாணவர் மீது டெம்போ மோதியது. இந்த விபத்தில் மாணவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
மாணவர்
களியக்காவிளை அருகே உள்ள படந்தாலுமூடு மீனச்சல் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவருடைய மகன் தீபக் (வயது 19). இவர் களியக்காவிளை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இதற்காக தினமும் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்று வந்தார்.
அதன்படி காலையில் வழக்கம் போல் அவர் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். ஒற்றாமரம் பகுதியை சென்றடைந்த போது மோட்டார் சைக்கிள் திடீரென நிலைதடுமாறியது. இதனால் தீபக் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்ததாக தெரிகிறது.
சாவு
அந்த சமயத்தில் பின்னால் வந்த டெம்போ தீபக் மீது ஏறி இறங்கியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில் அவர் உடல் நசுங்கி அதே இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டெம்போ மோதியதில் மாணவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.