செல்போனை அடகுவைத்து தந்தை மதுகுடித்ததால் வேதனை - கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
|ஆர்.கே.பேட்டை அருகே தனது செல்போனை அடகுவைத்து தந்தை மதுகுடித்ததால் வேதனை அடைந்த கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆர்.கே.பேட்டை,
பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம் வெள்ளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஜே.ஜே நகர் பகுதியில் வசித்து வருபவர் கோபி. ஆர்.கே.பேட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி சொரக்காயலம்மா. ஊராட்சியில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். அவர்களது மகன் பாலு (19 வயது). திருத்தணி அரசினர் கலை கல்லூரியில் பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கோபி குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது.
இவர் வீட்டில் இருக்கும் பொருட்களை எல்லாம் அடகு வைத்து குடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அவரது மனைவி கண்டித்து வந்துள்ளார். இந்த நிலையில், சில தினங்களுக்கு முன் கோபி குடிப்பதற்கு பணம் இல்லாததால் மகன் பாலுவின் செல்போனை எடுத்து சென்று ஆயிரம் ரூபாய்க்கு அடகு வைத்து குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த மகன் பாலு தந்தையை கண்டித்தார்.
இதனால் தந்தை கோபி கோபித்துக் கொண்டு வெளியே சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த கல்லூரி மாணவர் பாலு வீட்டில் நேற்று யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தெரியவந்ததும் ஆர்.கே.பேட்டை போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.