தூத்துக்குடி
ஓட்டப்பிடாரம் அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை-காரணம் என்ன? போலீசார் விசாரணை
|ஓட்டப்பிடாரம் அருகே, கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் என்ன என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே, கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் என்ன என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கல்லூரி மாணவர்
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே மேல முடிமன் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் மகன் பிரவீன்குமார் (வயது 20). இவர் பசுவந்தனை அருகே நாகம்பட்டியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் மனோ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.காம். படித்து வந்தார்.
நேற்று முன்தினம் அவருடைய தாயார் பத்மா தேனியில் உள்ள பிரவீன்குமார் சகோதரி வீட்டிற்கு சென்று இருந்தார். பிரவீன் குமார் மட்டும் வீட்டில் தனியாக இருந்ததாக கூறப்படுகிறது.
தூக்குப்போட்டு தற்கொலை
வெகு நேரமாக வீடு பூட்டப்பட்டு இருந்ததை கண்டு அருகில் இருந்தவர்கள் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தனர். அப்போது பிரவீன்குமார் சேலையால் தூக்குப்போட்டு பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியில் உள்ளவர்கள் ஓட்டப்பிடாரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் விரைந்து வந்து பிரவீன்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரணம் என்ன?
சில நாட்களாக பிரவீன் குமார் மன சோர்வுடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
எதற்காக அவர் தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரவீன் குமார் செல்போனையும் கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.