கன்னியாகுமரி
கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
|மேலகிருஷ்ணன்புதூர் அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலகிருஷ்ணன்புதூர்:
மேலகிருஷ்ணன்புதூர் அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கல்லூரி மாணவர்
குமரி மாவட்டம் மேலகிருஷ்ணன் புதூர் அருகே பள்ளம் பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது 58), மீனவர். இவருடைய மனைவி ரூபின் மேரி (52). இவர், அந்தப் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
இவர்களின் மூத்த மகன் கிளின்டன் கிறிஸ்டோ அலெக்ஸ் (26). இவர் சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வருகிறார். 2-வது மகன் ரூபிக்சன் காஸ்ட்ரோ (22) தனியார் கல்லூரி ஒன்றில் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 2 நாட்களாக ரூபிக்சன் காஸ்ட்ரோ தனது தாயாரிடம் படிப்பு சரிவர புரியவில்லை என்று கூறி வந்துள்ளார். அதை பெரிதாக எடுத்து கொள்ளாதே என்று, அவரை தாயார் சமாதானம் செய்ததாக கூறப்படுகிறது.
தற்கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் வழக்கம் போல் ரூபின் மேரி பணிக்கு புறப்பட்டு சென்றார். வீட்டில் அலெக்ஸ் மற்றும் ரூபிக்சன் காஸ்ட்ரோ ஆகியோர் இருந்தனர். மதியம் மகனை சாப்பிடவருமாறு அலெக்ஸ் அழைத்தார். ஆனால் அவர் தனக்கு தற்பொழுது சாப்பாடு வேண்டாம் என்று கூறிவிட்டு வெளியே சென்றார்.
இந்த நிலையில் மாலையில் ரூபின் மேரி வீட்டுக்கு திரும்பினார். அவர் மகனை பற்றி கணவரிடம் கேட்ட போது, வெளியே சென்று உள்ளதாக அவர் கூறினார். ஆனால் ரூபிக்சன் காஸ்ட்ரோவின் மோட்டார் சைக்கிள் மற்றும் செருப்பு வீட்டின் வெளியே கிடந்ததால் ரூபின் மேரிக்கு சந்தேகம் வந்தது. மகனை வீடு முழுவதும் தேடினார். அப்போது வீட்டின் பின்புறம் உள்ள அறையில் ரூபிக்சன் காஸ்ட்ரோ தூக்கில் பிணமாக தொங்கினார். அதை பார்த்ததும் அலெக்ஸ், ரூபின் மேரி ஆகியோர் அதிர்ச்சி அடைந்து, கதறி அழுதனர். அதைத்தொடர்ந்து சுசீந்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விசாரணை
உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் சாயிலெட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரூபிக்சன் காஸ்ட்ரோவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து அலெக்ஸ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர் தற்கொலைக்கான காரணம் என்ன? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.