திருச்சி
கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
|கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கல்லூரி மாணவர்
திருச்சி குழுமணிரோட்டில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் அய்யகாளை என்ற தேவராஜா (வயது 19). இவர் ஒரு கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இவரது பெற்றோர் இறந்துவிட்டதால் தனது பெரியம்மா வீட்டில் அவர் வளர்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் தேவராஜா வீட்டில் தூக்குப்போட்டுதற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதியவர் சாவு
*திருச்சி கிராப்பட்டி அன்பு நகரை சேர்ந்தவர் ஜபருல்லா(75). இவர் சம்பவத்தன்று குண்டூர் பஸ் நிறுத்தம் அருகே தனது பேரன் ரெடகாத்கானுடன்(19) மொபட்டில் வந்தார். அப்போது பின்னால் திருச்சி பீமநகரை சேர்ந்த ரபிக் மகன் முதல்சிர் (19) என்பவர் ஓட்டி வந்த மொபட், ரெடகாத் கான் மொபட்டின் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ஜபருல்லாவை திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
*நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தாலுகா தேவராயபுரம் பகுதியை சேர்ந்த தங்கராசு(65), தனது ஸ்கூட்டரில் தனது நண்பர் ராஜா (65) என்பவரை அழைத்துக்கொண்டு தா.பேட்டை அருகே வெள்ளாளப்பட்டி - ஜடமங்கலம் சாலையில் சென்றார். ஆண்டிப்பட்டி அருகே சென்றபோது முசிறி தாலுகா, பாப்பாப்பட்டி பகுதியை சேர்ந்த முருகையா(27) என்பவர் ஓட்டி வந்த மொபட், ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் கீழே விழுந்து காயமடைந்த தங்கராசு, ராஜா ஆகியோர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து தா.பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிணற்றில் மூதாட்டி பிணம்
*புத்தாநத்தத்தை அடுத்த டி.சுக்காம்பட்டி பகுதியில் உள்ள கிணற்றில் மூதாட்டி ஒருவர் பிணமாக மிதப்பதை பார்த்த தோட்டத்தின் உரிமையாளர் இதுதொடர்பாக அளித்த தகவலின்பேரில் வருவாய்த்துறையினர் மற்றும் புத்தாநத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த மூதாட்டி சீல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த வசந்தா(62) என்பதும், கிணற்றில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்ததும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது
*மணப்பாறையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து இந்து முன்னணி சார்பில் பஸ் நிலையம் எதிரே மாவட்ட அமைப்பாளர் குழந்தைவேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உருவப்படத்தை எரிக்க முயன்ற நிலையில், அவர்களை மணப்பாறை போலீசார் தடுத்து நிறுத்தி 21 பேரை கைது செய்து மாலையில் விடுவித்தனர்.