கன்னியாகுமரி
கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
|திருவட்டார் அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவட்டார்:
திருவட்டார் அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரி மாணவர்
குமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள செறுகோல் கல்லாம்பொற்றைவிளை பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 48), தொழிலாளி. இவருடைய மனைவி சாந்தி. இவர்களுக்கு சஜின் (23), சுஜின் (20) என்ற 2 மகன்கள். அந்த பகுதியில் உள்ள ஒரு முந்திரி ஆலையில் சாந்தி வேலை செய்து வருகிறார். மூத்த மகன் சஜின் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். 2-வது மகனான சுஜின் அம்மாண்டிவிளையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டி.பார்ம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இதற்காக சுஜின் தினமும் காலையில் கல்லூரிக்கு பஸ்சில் சென்று விட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம். பொதுவாக கல்லூரி முடிந்ததும் வீட்டுக்கு வரும் சுஜின் வேறு எங்கும் வெளியில் செல்வது கிடையாதாம். சிறிது நேரம் செல்போன் பார்ப்பதும், பின்னர் பாடங்களை படித்து விட்டு இரவு தூங்கச் செல்வது வழக்கம் என கூறப்படுகிறது.
தற்கொலை
இந்தநிலையில் நேற்று முன்தினம் காலையில் கணேசன், அவரது மனைவி சாந்தி மற்றும் மகன் சஜின் ஆகிய 3 பேரும் அவரவர் பணிக்கு சென்று விட்டனர். அதே சமயத்தில் சுஜின் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதற்கிடையே வேலைக்கு சென்ற சாந்தி மதியம் வீட்டுக்கு சாப்பிட வந்தார்.
படுக்கை அறைக்கு சென்று பார்த்த போது சுஜின் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கதறி அழுதார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சுஜினை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், சுஜின் ஏற்கனவே இறந்து விட்டதாக ெதரிவித்தனர். அதைக்கேட்டு குடும்பத்தினர் கதறி அழுதனர்.
போலீசார் விசாரணை
மேலும் இதுபற்றி தகவல் அறிந்ததும் திருவட்டார் போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் சுஜினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சுஜின் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.