திருவள்ளூர்
பள்ளிப்பட்டு அருகே கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை
|பள்ளிப்பட்டு அருகே கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பள்ளிப்பட்டு தாலுகா கரிம்பேடு கிராமத்தில் உள்ள கோவில் தெருவை சேர்ந்தவர் பழனி (வயது 45). இவரது மகன் மனோஜ் குமார் (20). இவர் ஆந்திர மாநிலம் புத்தூரில் உள்ள அரசு கல்லூரியில் பி.எஸ்.சி. படித்து வந்தார். இந்த நிலையில் வீட்டிற்கு வந்த மனோஜ் குமார் அந்த பகுதியில் உள்ள பால்வாடி பள்ளி அருகே அங்கன்வாடி அருகே மயங்கி கிடந்தார். இதை அறிந்த உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக நகரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதித்து விட்டு மனோஜ் குமார் விஷம் குடித்ததாக தெரிவித்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருப்பதி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மாணவனின் தந்தை பழனி பள்ளிப்பட்டு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். அதில் மனோஜ் குமாருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதாகவும், இதற்காக அவர் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை என்றும் கூறப்படுகிறது. சம்பவத்தன்று அவருக்கு வயிற்றுவலி அதிகமாகவே பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இதைபோல பொதட்டூர்பேட்டை அருகே கண்டா வாரி குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் முனிரத்தினம் (65). கூலி தொழிலாளி. இவர் கடந்த 17-ந் தேதி தனது வீட்டு வாசலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரை விஷ பாம்பு கடித்தது. இதனால் அலறிய அவரை உறவினர்கள் பொதட்டூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது மகன் நாகரத்தினம் (31) பொதட்டூர் பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.