சென்னை
அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு கல்லூரி மாணவி தற்கொலை
|சென்னை கொடுங்கையூரில் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை கொடுங்கையூர் எம்.ஜி.ஆர். நகர் 5-வது தெருவைச் சேர்ந்தவர் பவானி. இவருடைய கணவர் ஆறுமுகம் இறந்து விட்டார். தனது மகள் கீர்த்தனா (வயது 18) உடன் வசித்து வந்தார். கீர்த்தனா, திருவொற்றியூர் அரசு கலைக்கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 2 நாட்களாக கீர்த்தனா வீட்டில் சோகமாக இருந்தார். இதுபற்றி அவரது தாய் பவானி கேட்டதற்கு அவர் பதில் சொல்ல மறுத்துவிட்டார். திடீரென கீர்த்தனா, 30-க்கும் மேற்பட்ட தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பவானி, கீர்த்தனாவை சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கீர்த்தனா நேற்று பரிதாபமாக உயரிழந்தார். இது குறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கீர்த்தனா, அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவனை காதலித்து வந்ததாகவும், இவர்கள் காதலில் ஏதோ பிரச்சினை ஏற்பட்டதால் விரக்தி அடைந்த கீர்த்தனா அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.