காதலிக்கு 'வாட்ஸ்அப்'பில் தகவல் அனுப்பிவிட்டு கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
|தற்கொலை செய்து கொள்ளப்போவதாக காதலிக்கு ‘வாட்ஸ்அப்’பில் தகவல் அனுப்பிவிட்டு கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
முகப்பேர்,
சென்னை முகப்பேர் மேற்கு, முதல் பிளாக் பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவருடைய மனைவி செல்வராணி. இவர்களுடைய மகன் மோகன் (வயது 19). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாதபோது மோகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்துவந்த நொளம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் மோகன் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
காதலிக்கு தகவல்
மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். மோகன் அதே பகுதியைச் சேர்ந்த 19 வயதான இளம்பெண்ணை காதலி வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் அவ்வப்போது தற்கொலை செய்யப்போவதாக கூறி விளையாட்டாக ஒருவரை ஒருவர் மிரட்டி கொள்வது வழக்கம்.
அதேபோல் நேற்று மதியம் காதலியுடன் ஏற்பட்ட லேசான கருத்து வேறுபாட்டில் "நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன்" என 'வாட்ஸ் அப்'பில் மோகன் தகவல் அனுப்பினார்.
வழக்கம்போல் விளையாட்டாக மோகன் தகவல் அனுப்பியதாக நினைத்த அவரது காதலி, அதற்கு பதில் ஏதும் அனுப்பாததால் விரக்தி அடைந்த மோகன், தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.