கல்லூரி மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி.. சிக்கிய மாணவியின் கடிதம்
|விழுப்புரம் அருகே, கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி தொடர்பாக, 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னை
விழுப்புரம் கே.கே.ரோடு மணி நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 47). இவரது மனைவி தேவி. இவர்களது மகள் ரம்யா (18). இவர் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.பார்ம் படித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் ரம்யா கல்லூரியில் முதல் மாடியில் உள்ள தனது வகுப்பிற்கு சென்றார். பின்னர் காலை 10.30 மணிக்கு சக மாணவிகளிடம் கழிப்பறைக்கு செல்வதாக கூறிவிட்டு வகுப்பறையை விட்டு வெளியே வந்தார்.
அப்போது திடீரென முதல் மாடியில் இருந்து ரம்யா கீழே குதித்தார். இதில் அவர் பலத்த காயமடைந்தார். மாணவி திடீரென தற்கொலைக்கு முயன்றதால் பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பின்னர் காயமடைந்த மாணவியை உடனடியாக மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.
தற்போது அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அனைத்து மருத்துவ உபகரணங்கள் கொண்ட ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட ரம்யா எழுதிய ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த கடிதம் குறித்த விவரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை. 2 தனிப்படைகள் அமைப்பு இதற்கிடையே விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா சம்பவ இடத்திற்கு வந்து விரைந்து விசாரணை நடத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து பேராசிரியர்கள், மாணவியின் தோழிகள், கல்லூரி ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். மாணவியின் தற்கொலை முயற்சிக்கான உண்மை காரணத்தை கண்டறிய ஏ.எஸ்.பி. அபிஷேக் குப்தா, டி.எஸ்.பி. பார்த்திபன் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.
மாணவியிடமிருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில், குடும்பப் பிரச்சினை காரணமாக, தற்கொலைக்கு செய்து கொள்ளப்போவதாக எழுதியிருந்தது தெரியவந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்கு, நீதிபதியிடம் வேண்டுகோள் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக, விரிவான புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.