2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி மாணவர் கைது
|2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை,
குமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த ஸ்ரீதர்ஷன்(வயது 22). இவர் கோவையில் ஒரு கல்லூரியில் எம்.ஏ. ஆங்கிலம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு 21 வயது கல்லூரி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. ஸ்ரீதர்ஷன் அந்த மாணவியை பல இடங்களுக்கு அழைத்து சென்றார்.
இந்தநிலையில் அந்த மாணவி கோவை குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்தார். அதில் ஸ்ரீதர்ஷன் என்னை காதலிப்பதாக கூறினார். நானும் அவரை நம்பினேன். அவருடன் வெளியே சென்று வந்தேன். அப்போது பாலியல் தொல்லை கொடுத்தார். செல்போனில் நெருக்கமாக எடுத்த புகைப்படங்களை காட்டி என்னை மிரட்ட தொடங்கினார்.
அவர் சொல்லும் இடத்திற்கு வர மறுத்தால் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதாக மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். மேலும் எனது குடும்பம் குறித்தும் தரக்குறைவாக பேசினார். சம்பவத்தன்று எனது தோழிகளுடன் பேசி கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த ஸ்ரீ தர்ஷன் என்னை கடுமையாக மிரட்டினார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதுபோல் தேனியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஸ்ரீதர்ஷன் மீது குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகார் மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
கல்லூரி மாணவர் ஸ்ரீதர்ஷனும் நானும் காதலித்து வந்தோம். அப்போது அவருக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனால் நான் அவரிடம் இருந்து விலகினேன். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் நாங்கள் காதலிக்கும் போது எடுத்த புகைப்படங்களை காட்டி என்னை பாலியல் ரீதியாக மிரட்டினார். மேலும் அவர் சொல்கிறபடி நடக்கவில்லை என்றால் புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டுகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த புகார்களின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீதர்ஷனை கைது செய்தனர். மேலும் அந்த மாணவரின் செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.