மின்சாரம் தாக்கி கல்லூரி பேராசிரியை பலி
|திருவண்ணாமலை அருகே துணிகளை காய வைத்தபோது மின்சாரம் தாக்கி கல்லூரி பேராசிரியை பரிதாபமாக உயிரிழந்தார். காப்பாற்ற முயன்ற கணவரும்-மகனும் காயம் அடைந்தனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருகே உள்ள சடையனோடை கிராமத்தை சேர்ந்தவர் உத்தராசா (வயது 48), கல்லூரி பேராசிரியர். இவரது மனைவி கலையரசி (45), திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் கணினி பேராசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களது மகன் கிரிஷ்வரன் (15).
நேற்று முன்தினம் மாலையில் கலையரசி துணியை துவைத்துவிட்டு காய வைக்க கொடி கம்பியில் துணியை போட்டு உள்ளார். அப்போது மழையின் காரணமாக மின்கசிவு ஏற்பட்டு கொடி கம்பியில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்ததால் ஈரத் துணி கம்பியில் போட்டதும் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதனால் வலி தாங்க முடியாமல் அலறினார். சத்தம் கேட்டு அவரது கணவர் மற்றும் மகன் ஆகியோர் வந்து கலையரசியை தொட்டு காப்பாற்ற முயன்றனர். அவர்களையும் மின்சாரம் தாக்கியது.
சிகிச்சை பலனின்றி சாவு
அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கலையரசி பரிதாபமாக உயிரிழந்தார்.
காயம் அடைந்த கணவர் உத்தராசா, மகன் கிரிஷ்வரன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் 2 பேர் பலி
இதேபோல் வெவ்வேறு இடங்களில் நடந்த சம்பவத்தில் மின்சாரம் தாக்கி திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே கோமாளபேட்டை கிராமத்தை சேர்ந்த சுமை தூக்கும் ஊழியர் ராமச்சந்திரன் (வயது 42), நாகையை சேர்ந்த தொழிலாளர் நல வாரிய தற்காலிக ஊழியர் பாபு (48) ஆகியோரும் பரிதாபமாக இறந்தனர்.
கனமழை காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே உள்ள நெடுங்குளம் பகுதியை சேர்ந்த செல்லபாப்பா (55) என்பவர் உயிரிழந்தார்.