< Back
மாநில செய்திகள்
இலவச கல்வி திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற கல்லூரி இறுதி ஆண்டு மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

இலவச கல்வி திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற கல்லூரி இறுதி ஆண்டு மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்

தினத்தந்தி
|
26 Nov 2022 4:46 PM IST

இலவச கல்வி திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற கல்லூரி இறுதி ஆண்டு மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ- மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3-ம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/மிகவும் பிற்பட்ட வகுப்பினர் /சீர் மரபினர் மாணவ-மாணவியருக்கு இலவச கல்வி திட்டத்தின்கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ- மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை இணையதளம் புதுப்பித்தலுக்கு 10.11.2022 முதல் செயல்பட தொடங்கும்.

புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் 6.12.2022-க்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதே போல் புதிய இனங்களுக்கு இணையதளம் 15.12.2022 முதல் செயல்பட தொடங்கும். புதிய இனங்களுக்கான விண்ணப்பங்கள் 20.1.2023-க்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அரசு இணைய தளம் https://www.bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship-schemes-லும் இந்த திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் உள்ளது.

மேலும் விவரங்களுக்கு காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்