குலசேகரன்பட்டினத்தில் தனியார் ஆம்னி பஸ் மோதி கல்லூரி ஊழியர் பலி..!
|குலசேகரன்பட்டினம் அருகே பைக்கில் சென்றுகொண்டிருந்த கல்லூரி ஊழியர் மீது, தனியார் ஆம்னி பஸ் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி:
குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் நிலம் கையகப்படுத்தும் தாசில்தார் ஆக ரதிகலா பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் சந்தனகுமார் (வயது 55) உடன்குடி அருகே உள்ள தனியார் கல்லூரியில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு சந்தனகுமார் பைக்கில் திருச்செந்தூரில் இருந்து சென்றபோது உடன்குடியில் இருந்து சென்னை சென்ற தனியார் பேருந்து மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
ஆம்னி பேருந்தின் அடியில் சிக்கிக்கொண்ட சந்தனகுமாரை குலசேகரன்பட்டினம் போலீசார் ஜேசிபி எந்திரம் மூலம் மீட்டு திருச்செந்தூர் ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் ஆம்னி பேருந்து ஓட்டிவந்த சென்னை தண்டையார்பேட்டை சேர்ந்த செந்தில்குமார் (38 )என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.