< Back
மாநில செய்திகள்
நெல்லை கலெக்டர் அலுவலகம் முன் உறவினர்கள் சாலை மறியல்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

நெல்லை கலெக்டர் அலுவலகம் முன் உறவினர்கள் சாலை மறியல்

தினத்தந்தி
|
23 May 2022 11:57 PM IST

களக்காடு அருகே சமையல் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில், உண்மை குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள், நெல்லை கலெக்டர் அலுவலகம் முன் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

நெல்லை:

களக்காடு அருகே சமையல் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில், உண்மை குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள், நெல்லை கலெக்டர் அலுவலகம் முன் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

சமையல் தொழிலாளி கொலை

களக்காடு அருகே சிங்கிகுளத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 43). சமையல் தொழிலாளியான இவரை நேற்று முன்தினம் மர்மநபர்கள் வெட்டிக்கொலை செய்தனர். இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட முருகனின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், புதிய மக்கள் தமிழ் தேசம் கட்சி தலைவர் செந்தூர் மகாராஜன் தலைமையில் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள், முருகனை கொலை செய்த உண்மை குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகம் முன் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது முருகனின் உறவினர்கள் கண்ணீர் மல்க தரையில் புரண்டு கதறி அழுதனர்.

உடலை வாங்க மறுத்து போராட்டம்

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உதவி போலீஸ் கமிஷனர் விவேகானந்தன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் திருப்பதி, பிரவீனா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உண்மை குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று முருகனின் உறவினர்கள் வலியுறுத்தினர். பின்னர் அவர்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கினர்.

அதில், ''முருகன் கொலை செய்யப்பட்டு 30 மணி நேரம் ஆகியும் போலீஸ் உயர் அதிகாரிகள் யாரும் சம்பவ இடத்துக்கு வரவில்லை. கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும்'' என்று தெரிவித்து இருந்தனர்.

போராட்டத்தில் பங்கேற்ற முருகனின் உறவினர்கள் கூறுகையில், ''முருகனை கூலிப்படையை ஏவி, முகத்தை சிதைத்து கொலை செய்து விட்டார்கள். இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. குற்றவாளிகளை கைது செய்யும் வரையிலும் முருகனின் உடலை வாங்க மாட்டோம்'' என்றனர்.

மேலும் செய்திகள்