கள்ளக்குறிச்சி
கலெக்டர் அலுவலகத்தை மலைவாழ் மக்கள் திடீர் முற்றுகை
|அனுபவ நிலத்துக்கு பட்டா வழங்கக்கோரி கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை மலைவாழ் மக்கள் திடீரென முற்றுகையிட்டனர்.
கள்ளக்குறிச்சி
அனுபவ நிலம்
கல்வராயன் மலையில் உள்ள பட்டிவளவு, கெடார் ஆகிய கிராமங்களில் வசிக்கும் மலைவாழ் மக்கள் தங்களின் அனுபவ நிலங்களில் 50 வருடங்களுக்கு மேலாக விவசாயம் செய்து வருகிறார்கள். இந்த நிலங்களுக்கு பட்டா வழங்கக்கோரி தமிழ்நாடு எஸ்.டி.மலையாளி பேரவை சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு சென்னை ஐகோா்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் முடிவில் தனிதாசில்தார் நியமனம் செய்து கல்வராயன்மலை முழுவதும் நில அளவை செய்து பட்டா வழங்க வேண்டும் என கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர்
இந்த நிலையில் மலைவாழ் மக்கள் வருடந்தோறும் விவசாயம் செய்வதற்கு முன் நிலத்தை சுத்தம் செய்து வருவதாக கூறப்படுகிறது. அதன்படி இந்தாண்டு நிலத்தை சுத்தம் செய்தபோது வெள்ளிமலை சரகத்துக்குட்பட்ட வனச்சரகர் தமிழ்ச்செல்வன், வன அலுவலர் வினோத்குமார் மற்றும் வனக்காவலர்கள் ஆகியோர் குறிப்பிட்ட இடம் காப்புக்காடாக மாற்றப்பட்டுள்ளது என்று கூறி விவசாயம் செய்யவிடாமல் தடுத்து நிறுத்தி பொய் வழக்கு போட்டு வருவதாகவும், ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் என்ற பெயரில் பணம் வசூல்செய்வதாகவும், பணம் பெற்றதற்கான ரசீது வழங்கப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது.
இதையடுத்து பொய் வழக்கு போடும் வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், அனுபவ நிலத்துக்கு பட்டா வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி 300-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டனர்.
பேச்சுவார்த்தை
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரிடம் மலைவாழ் மக்கள் கொடுத்தனர். மனுவை பெற்ற கலெக்டர் இது தொடர்பாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துசென்றனர். கலெக்டர் அலுவலகத்தை மலைவாழ் மக்கள் திடீரென முற்றுகையிட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.