கடலூர்
கோட்டாட்சியர், தாலுகா அலுவலகங்களில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெறும் கலெக்டர் தகவல்
|கோட்டாட்சியர், தாலுகா அலுவலகங்களில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெறும் என கலெக்டர் பாலசுப்பிரமணியம் தொிவித்துள்ளாா்.
கடலூர் மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி, அவர்களின் பயண நேரத்தை குறைக்கவும், தேவையற்ற சிரமத்தை போக்கவும், இனி அனைத்து கோட்டாட்சியர் அலுவலகங்களில் மாதத்தில் 2-வது திங்கட்கிழமை அன்று சப்-கலெக்டர் அல்லது கோட்டாட்சியர் தலைமையிலும், வட்ட அளவில் தாலுகா அலுவலகங்களில் மாதத்தில் முதல் மற்றும் 3-வது திங்கட்கிழமைகளில் தாசில்தார் தலைமையிலும் காலை 10.30 மணி அளவில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது. விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் அனைத்து விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில், கடலூர் மாவட்ட விவசாயிகள் தங்களது வேளாண்மை சார்ந்த குறைகளை தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்படும். விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாகவும் வழங்கலாம், விவசாயிகள் தெரிவித்திடும் கோரிக்கைகள் மீது சம்பந்தப்பட்ட துறையின் உயர் அலுவலர்கள் உரிய பதில் அளிக்கவும், தொடர் நடவடிக்கை எடுக்கவும் அனைத்துத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆகவே கடலூர் மாவட்ட விவசாயிகள் கோட்ட மற்றும் வட்ட அளவில் மாதத்திற்கு 3 முறை நடைபெறும் விவசாய குறைதீர்வு கூட்டங்களில் கலந்து கொண்டு தங்களது குறைகளை தங்கள் அருகில் உள்ள அலுவலகங்களிலேயே நிவர்த்தி செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.