< Back
மாநில செய்திகள்
சுருக்குமடி வலையை பயன்படுத்தும் மீனவர்களுக்கு நலத்திட்ட உதவி ரத்து கலெக்டர் எச்சரிக்கை
கடலூர்
மாநில செய்திகள்

சுருக்குமடி வலையை பயன்படுத்தும் மீனவர்களுக்கு நலத்திட்ட உதவி ரத்து கலெக்டர் எச்சரிக்கை

தினத்தந்தி
|
3 July 2022 3:08 PM GMT

கடலூர் மாவட்டத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்தும் மீனவர்கள் மீது சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், நலத்திட்ட உதவிகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்றும் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குப்படுத்தும் சட்டப்படி கடலில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி கடலூர் மாவட்டத்தில் மீனவர்கள் சுருக்குமடி வலைகளை பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் சில இடங்களில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை சில மீனவர்கள் பயன்படுத்தி மீன்பிடித்து வருவதாக தகவல் தெரிகிறது. ஆகவே இந்த சுருக்குமடி வலைகளை பயன்படுத்துவதை சம்பந்தப்பட்ட மீனவர்கள் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.

நடவடிக்கை

கடலூர் மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரம், சிறு தொழில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை நிலைப்படுத்தவும், நீடித்த நிலையான வளர்ச்சிக்கான கடல் வளத்தை பேணி பாதுகாப்பதற்கும் ஒட்டு மொத்த மீனவர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தை பாதுகாத்திடும் நோக்கில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எடுக்கப்படும் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலை தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

மீனவ கிராம பகுதிகளில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் அரசால் அனுமதிக்கப்பட்ட சுமுகமான மீன்பிடிப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும். மீறி எவரேனும் செயல்பட்டால் சுருக்குமடி வலையை பயன்படுத்தும் படகுகள் மற்றும் வலைகள் பறிமுதல் செய்யப்படும். மேலும் சம்பந்தப்பட்ட மீனவர்கள் மீது சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் எவ்வித முன்னறிவிப்புமின்றி ரத்து செய்யப்படும்.

மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்