காஞ்சிபுரம்
காஞ்சீபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட முகாம்களை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு
|காஞ்சீபுரம் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகளின் விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாம்களை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு முதல்-அமைச்சர், கலைஞர் உரிமைத் திட்டத்தின் கீழ் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டதில் பயன் பெற விண்ணப்பம் பதிவு முகாம்கள் 2 கட்டமாக நடைபெற உள்ளது. முதல் கட்டமாக நேற்று 550 முகாம்கள் 24-07-2023 முதல் 04-08-2023 வரையிலும், இரண்டாம் கட்டமாக 193 முகாம்கள் 05-08-2023 முதல் 16-08-2023 வரையிலும் நடைபெற உள்ளது. காஞ்சீபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகளின் விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாம்களை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
மேலும் முகாம்களில் அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சாரம், இணையதளம், கழிப்பறை, பொதுமக்கள் அமர்வதற்கான இருக்கைகள் உள்ளனவா என ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் காஞ்சீபுரம் வருவாய் கோட்டாட்சியர் ச.ரம்யா வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பதிவு செய்யும் தன்னார்வலர்கள் உள்ளிட்ட துறை சார்ந்த அனைத்து அலுவலர்கள் இருக்கின்றனர்.