திருவள்ளூர்
கும்மிடிப்பூண்டி தாலுகாவில் புயல் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கலெக்டர் ஆய்வு
|கும்மிடிப்பூண்டி தாலுகாவில் மாண்டஸ் புயல் பாதிப்பு தொடர்பான முன் எச்சரிக்கையை நடவடிக்கைகளை ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர், அதிகாரிகள் முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
வங்க கடலில் உருவாகிய புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயல் சின்னமாக மாறியது. மாண்டஸ் என பெயரிடப்பட்டு உள்ள இந்த புயலின் பாதிப்பை கருத்தில் கொண்டு திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகாவில் பல்வேறு பகுதிகளில் செய்யப்பட்டு உள்ள முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை நேற்று மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் திடீரென நேரில் ஆய்வு செய்தார். அப்போது தாசில்தார் கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன், ஒன்றியக்குழுத்தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார் ஆகியோர் உடன் இருந்தனர். ஆரம்பாக்கம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பொதுமக்கள் தங்குமிடத்தில் செய்யப்பட்டு உள்ள வசதிகளையும், எளாவூர் அடுத்த தலையாரிப்பாளையத்தில் உள்ள பல்நோக்கு பேரிடர் மையத்தையும் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரிடையாக அவர் ஆய்வு செய்தார்.
புயல் மழையால் பாதிப்பு ஏற்படும் பாதுகாப்பற்ற தாழ்வான பகுதிகளை முன்னரே கண்டறிந்து அங்கிருந்து பொதுமக்களை கொண்டு வந்து இங்கு முன்னெச்சரிக்கையாக தங்க வைத்து தேவையான வசதிகளை அவர்களுக்கு செய்து தர வேண்டும் எனவும், பாதிப்பு வந்த பிறகு நடவடிக்கை எடுக்க கூடாது எனவும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், பேரிடர் காலத்தில் வருவாய்த்துறை உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் மிக கவனத்துடன் செயல்பட வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.