பெரம்பலூர்
புதுநடுவலூர் ஊராட்சியில் கலெக்டர் ஆய்வு
|புதுநடுவலூர் ஊராட்சியில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
பெரம்பலூர் ஒன்றியத்துக்குட்பட்ட புதுநடுவலூர் கிராம ஊராட்சி சிறப்பாக தூய்மை பணிகளை மேற்கொண்டதற்காகவும், சிறப்பு திட்டங்களை செயல்படுத்தியமைக்காகவும் கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் சிறந்த முன் மாதிரி கிராம ஊராட்சிக்கான விருது வழங்கப்பட்டது. புதுநடுவலூர் கிராம ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் கற்பகம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஊராட்சியில் கழிவு நீரினை உறிஞ்சி குழிகள் அமைத்து நல்ல நீராக மாற்றி நீர் நிலைகளில் விடும் திட்டத்தின் கீழ் 437 வீடுகளில் தனிநபர் உறிஞ்சி குழிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதையும், உறிஞ்சி குழி அமைக்க இடம் இல்லாதவர்களின் வீடுகளில் இருந்து வரும் கழிவு நீரினை கழிவு நீர் வாய்க்காலில் கொண்டு சென்று கிடைமட்டமான உறிஞ்சி குழி அல்லது செங்குத்தான உறிஞ்சி குழிகள் அமைத்து கழிவுநீரை சுத்திகரித்து மீண்டும் நல்ல நீராக மாற்றி நீர்நிலைகளில் விடப்பட்டு வருவதை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.40.15 லட்சம் மதிப்பில் திறந்த வெளி கிணறு அமைத்து அனைவருக்கும் குடிநீர் வழங்கப்பட்டு வருவதையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.24 லட்சம் மதிப்பில் நூலக கட்டிடத்தினை பழுது நீக்கம் செய்து புதுப்பிக்கப்பட்டுள்ளதையும், ராஷ்ட்ரிய கிராம சுராஜ் அபியான் திட்டத்தின் கீழ் ரூ.23.56 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லலிதா, ஆர்.டி.ஓ. (பொறுப்பு) சத்திய பால கங்காதரன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) அருளாளன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.