திருவண்ணாமலை
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கலெக்டர் ஆய்வு
|கீழ்பென்னாத்தூர் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார்.
கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியம் சு.பொலக்குணம் ஊராட்சிக்குட்பட்ட கலித்தேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு 2-ம் பருவ வகுப்புகள் தொடங்கப்பட்டது.
இதனை கலெக்டர் பா.முருகேஷ் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது மாணவ-மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கிய அவர் உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறை சுத்தமாக உள்ளதா? என்பதை பார்வையிட்டார்.
தொடர்ந்து பள்ளியில் தனியார் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் துறையின் மூலம் இயங்கும் குழந்தைகள் மையத்தை பார்வையிட்டு மையத்தை சுற்றிலும் தூய்மையாக வைத்திருக்க அறிவுறுத்தினார்.
அப்போது தலைமைஆசிரியை ராஜேஸ்வரி பள்ளியில், மழை காலங்களில் வகுப்பறையில் தண்ணீர் ஒழுகுகிறது. எனவே புதிய கட்டிடம் கட்டித்தருமாறு கேட்டார்.
அதற்கு பள்ளியை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் கூறினார்.
ஆய்வின் போது ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ராமகிருஷ்ணன், உதவி திட்டஅலுவலர் அருண், ஒன்றிய ஆணையாளர் அருணாச்சலம், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) காந்திமதி, தாசில்தார் சக்கரை, ஒன்றிய பொறியாளர்கள், ஊராட்சி மன்றதலைவர் குப்புஜெயக்குமார், துணைத்தலைவர் உமாதங்கராஜ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாமலை, ஊராட்சி செயலாளர் பாஸ்கரன் மற்றும் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.