திருவள்ளூர்
கடம்பத்தூர் ஒன்றியத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
|கடம்பத்தூர் ஒன்றியத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேற்று கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அதிகத்தூர் போளிவாக்கம், மப்பேடு, பேரம்பாக்கம், ஆகிய ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை திடீரென பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதிகத்தூரில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு சென்று அங்கு ஆய்வு செய்த கலெக்டர், பின்னர் மப்பேடு பகுதிக்கு சென்று தேசிய ஊரக உறுதி திட்டத்தில் பணி செய்து வரும் பெண்களிடம் கூலி முறையாக வழங்கப்படுகிறதா? என குறைகளை கேட்டறிந்தார். அதை தொடர்ந்து கலெக்டர் மப்பேடு ஊராட்சி மன்ற அலுவலகத்துக்குச் சென்று அங்கு பராமரிக்கப்படும் பதிவேடுகளை எடுத்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் கலெக்டர் மப்பேடு ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்து, மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் மூலம் பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக மஞ்சப்பைகளை வழங்கினார்.
அவருடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஜெயக்குமார், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயற்பொறியாளர் ராஜவேல், கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்தானம், சந்திரசேகர் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.